முருகனுடன் முதல்வர் விஜய்யை ஒப்பிடவில்லை: புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

முருகனுடன் முதல்வர் விஜய்யை ஒப்பிடவில்லை: புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

படங்கள்: இந்து தமிழ் திசை

17 Nov 2026 - 8:22 pm

1 mins read

சென்னை: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது நடைபெற்ற இசைக் கச்சேரியில், தமிழக முதல்வர் விஜய்யை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டுப் பாடியதாக எழுந்த சர்ச்சைக்கு, தமிழக இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், தனது பாடல் வரிகளின் உண்மையான அர்த்தத்தைத் தெளிவுபடுத்தி உள்ளார்.

அண்மையில் திருச்செந்தூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல் சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளானது. அதற்குப் பதிலளித்துள்ள அவர், தாம் பாடிய பாடலில் எவ்விதக் குறையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக முதல்வர்போல் என்ற இடத்தில் ஒரு காற்புள்ளி (கமா) உள்ளது. அதாவது, நம் தமிழக முதல்வர் வேண்டிக்கொண்டது போல, வேலெடுத்துப் பகை முடித்த முருகனிடம் நாமும் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்பதே அந்தப் பாடலின் பொருள்,” என்று விளக்கம் அளித்துள்ளார் புஷ்பவனம் குப்புசாமி.

வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு சாட்சியாகவே முதல்வரைத் தாம் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், முருகனுடன் ஒப்பிடவில்லை எனக் கூறியுள்ளார்.

“முருகப்பெருமானின் பேரருளுக்கு நிகர் எதுவும் கிடையாது. அவருக்கு நிகர் யாருமில்லை. தமிழ் அறிந்த நான் இத்தகைய பிழையை ஒருபோதும் செய்யமாட்டேன்,” என்று புஷ்பவனம் குப்புசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பக்திப்பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ள தன்னைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டாம் என்றும் உண்மையை அறிந்துகொண்டு இத்துடன் இந்த விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்