தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கமல்ஹாசன் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு

2 mins read
1654c877-760b-46f3-b1ff-01bfa6739773
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. - படம்: ஊடகம்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தக்ஸ் என்றால் மூர்க்கர்கள், போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்தப் பெயர் கமலஹாசனால் பெருமிதப்படுத்தப்பட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்திய வரலாற்றை ஆழமாக படித்தவர்கள் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் Thugs & Pindaris சென்ற மூர்க்கப் போக்கிரிக் கூட்டம் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை அறிவர் என்றும் அக்கூட்டம் இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளைக் கூட்டம் என்றும் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

“அவர்கள் மதரீதியாகவோ, இன மொழி ரீதியாகவோ அடையாளப்படுத்த முடியாத நாடோடி கும்பலாகும். அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது.

“வழிப்போக்கர்களோடு வழிப்போக்கர்களாக அண்டிப் பழகி, அவர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்துவிட்டு அவர்கள் உடைமைகளை கொள்ளை அடிப்பதுதான் அவர்களின் வாழ்வியல் முறை.

“ஏறக்குறைய நூறாண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அட்டகாசங்கள் இந்தியா எங்கும் கோலோச்சியது. கடுமையான போருக்கு பின்னரே அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள்,” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அக்கூட்டத்தின் மிச்ச சொச்சங்களாக சமூகத்தில் பரவியும் பதுங்கியும் கிடக்கும் மூர்க்க, போக்கிரித்தனம் கொண்டவர்களின் அடாவடி செயல்களை சமூகம் இன்னும் எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் வெளிப்பாடுகளாகவே தனித்து வீடுகளில் வசிக்கும் வயதானவர்களை குறி வைத்து கொலை செய்வது, நகை உடைமைகளை கொள்ளையடித்துச் செல்வது, கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் நுழைந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, அதிகாரிகளையே கொன்றுவிட்டு கனிமவளக் கொல்லையில் ஈடுபடுவது, நில மோசடிகளில் ஈடுபடுவது, கௌரவ சாதிய கொலைகள் செய்வது, அரசாங்கத் துறைகளை கைப்பற்றிக் கொண்டு ரவுடி ராஜ்ஜியம் செய்வது எல்லாமே அவர்களின் மிச்ச சொச்சங்கள்தான் என்று பட்டியலிட்டுள்ளார்.

எனவே, மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு முகவரியை ஏற்படுத்தும் விதத்தில் கமல்ஹாசன் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துவதாக கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இதனிடையே கன்னட மொழி குறித்த தமது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் அவரது ‘தக் லைஃப்’ படத்தைக் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில திரைப்பட வணிக சபை தெரிவித்துள்ளது.

கமல் வெள்ளிக்கிழமைக்குள் (மே 30) மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கெடுவும் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்