சென்னை: தமிழ்நாடு உட்பட எட்டு மாநில ஆளுநர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு வியாழக்கிழமை (ஜனவரி 5) மாலை வெளியானது.
தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்துவந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கேரள ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் நியமனம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை எனத் தமிழக அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை இரவு தெரிவித்ததாக தினமணி ஊடகச் செய்தி குறிப்பிட்டது.
2021 செப்டம்பர் 18ஆம் தேதியிலிருந்து இன்றுவரையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்து வந்தார் ஆர்.என். ரவி. அவரது பதவிக்காலத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும் அவருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உட்பட பல்வேறு விவகாரங்களில் இருதரப்புக்கும் இடையே சட்டபூர்வ மோதலும் நிலவியது. இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மேற்கு வங்க அரசுக்கும் அம்மாநில முன்னாள் ஆளுநர்களுக்கும் இடையேயும் கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தன.
தமது அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறிவந்தார்.
இந்நிலையில், தம்மைக் கலந்து ஆலோசிக்காமலேயே மாநிலத்தின் ஆளுநர் மாற்றப்பட்டிருப்பதாக மத்திய அரசு மீது மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

