சென்னை: சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி வெளியிட்ட அவதூறான கருத்துகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி வழக்கு தொடுக்க நேரிடும் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ரகுமான் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் அவர் அற்புதமான மனிதர் என்றும் மனைவி சாய்ரா பானு வேண்டுகோள் விடுத்தார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரகுமான் தமது பணிகளைக் கவனிக்க சென்னையில் இருப்பதாகவும் சாய்ரா பானு ஒலிப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“ரகுமான் இந்த உலகில் மிக நல்ல மனிதர். அவரையோ, என் குழந்தைகளையோ நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எங்கள் விவாகரத்து குறித்து பொய்யான தகவல் பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். விரைவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்புவேன்” என சாய்ரா பானு மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சமூக ஊடகங்கள் மூலம் பலர் பொய்யான, கற்பனையான கதைகளைக் கண்டுபிடித்து எழுதுவதாக ஏ.ஆர்.ரகுமானின் வழக்கறிஞர் நர்மதா சம்பத் கூறியுள்ளார்.
“சிலரது பேட்டிகளும் வெளியாகி உள்ளன. இந்தச் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. மலிவான விளம்பரத்துக்காக ரகுமானை அவதூறு செய்கின்றனர்,” என்று வழக்கறிஞர் நர்மதா சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.