சென்னை: தமிழகத்தில் வெறிநாய்க்கடி சம்பவங்கள் நாள்தோறும் பதிவாகி வருவதாகவும் பெரும்பாலும் சிறார்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தெருநாய்கள் பிரச்சினையைத் தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும்கூட நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தெருநாய்கள் விவகாரம் தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாகத் தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டது எனக் கேள்வி எழுப்பியது.
“அரசின் அறிக்கையில் வேண்டுமானால் நடவடிக்கை குறித்த விவரங்கள் இருக்கலாம். ஆனால், களத்தில் எதுவும் தெரியவில்லை,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தெருநாய்கள் விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் இந்திய உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அவற்றை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக அறிக்கை தயாராக உள்ளது எனவும் அதனைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வேண்டும் எனவும் தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று, அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்.

