சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் அமெரிக்கா சென்று உரையாற்றிய ராகுல் காந்தி அங்கு கூறிய கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் தர்வீந்தர் சிங், “ராகுல் காந்தி, இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருங்கள், இல்லையெனில் வரும் காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும்,” என அச்சுறுத்தியிருந்தார்.
அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளும் ஷிண்டே சேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ‘ராகுல் காந்தியின் நாக்கை துண்டித்து வருபவருக்கு சன்மானம்’ என்று அறிவித்ததோடு பல்வேறு அருவருக்கத்தக்க விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் முன்வைத்தார்..
இவற்றைச் சுட்டிக் காட்டியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக தலைவர் ஒருவர் “ராகுல் காந்தி அவர்களின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும்” எனவும், ஷிண்டே சேனாவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் “ராகுல் காந்தி அவர்களின் நாக்கை அறுப்பவருக்குப் பரிசு” எனவும், இன்ன பிற வகைகளிலும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
“எனது சகோதரர் ராகுல் காந்தியை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதும், நாளுக்கு நாள் அவருக்குக் கூடி வரும் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ளதன் தொடர்ச்சியாகவே அவர்கள் இத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கின்றனர்.
எனவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது மக்களாட்சியில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.


