பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கும்படி ராகுல் கோரிக்கை

2 mins read
890f35aa-0df1-4ca5-8259-5c2470f0e34c
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கும்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்ய நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடரும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தான் உறுதியுடன் நிற்பதாகக் கூறி, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், காணொளி மூலம் அவர் பேசியபோது, “பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.

“பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களை உயிர்த்தியாகம் செய்தவர்களாகக் கருதி, அவர்களுக்கு தியாகி அந்தஸ்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்குவதற்கு உதவுமாறு என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

“ஆகையால், அவர்களுக்கு உரிய மரியாதை வழங்குவதுடன், தியாகி அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்,’’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே, பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (மே 1) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பஹல்காம் தாக்குதல் குறித்து மத்திய அரசு விசாரித்து வரும் நிலையில், அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போதைய நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை இருந்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

“பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க முடியாது. விசாரணை அமைப்புகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துவது போன்று மனுதாரரின் பொதுநல மனு உள்ளது,” என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, பொறுப்பற்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் பதேஷ் சாஹூவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்