ராகுல்-ஸ்டாலின் கூட்டணி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

2 mins read
2af6e9ea-de41-4e87-9201-ab9a18ad1c9a
கடற்கரைப் பகுதியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக அண்மையில் வெளியான தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்த கருத்துகள், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.

தனது வீட்டில் ராகுலுக்கு அறுசுவை விருந்தளிக்க விரும்புவதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு உரிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு தாம் சைக்கிள் ஓட்டும் காணொளிப்பதிவு ஒன்றை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சிக்காகோ கடலோரப் பகுதியில் எடுக்கப்பட்ட இக்காணொளியைப் பகிர்ந்துள்ள அவர், ‘மாலைப்பொழுதின் அமைதி புதிய கனவுகளுக்கு தளம் அமைக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவை கவனித்த ராகுல் காந்தி, “சகோதரரே, சென்னையில் நாம் இருவரும் இணைந்து எப்போது சைக்கிள் ஓட்டலாம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் சென்னையில் ஒன்றாக சைக்கிள் ஓட்டி, அதன் இதயத்தை அறிந்துகொள்வோம் எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

“நான் இன்னமும் தங்களுக்கு என் தரப்பில் இருந்து இனிப்புகள் வழங்க வேண்டியுள்ளது. எனவே, மிதிவண்டிப் பயணம் முடிந்ததும் எனது இல்லத்தில் இனிப்புடன் கூடிய அறுசுவை தென்னிந்திய உணவை உண்டு மகிழ்ந்திடுவோம்” என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்மையில், சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இதனால் திமுக, காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படும் என சிலர் கூறிவந்தனர். மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ராகுலும் தங்கள் சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில், அடுத்தடுத்து வெளியிட்ட பதிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழகத்தின் சிங்காநல்லூர் பகுதியில் இருவரும் இணைந்து பிரசாரம் மேற்கொண்டபோது யாரும் எதிர்பாராத வகையில், அங்கு சாலையோரத்தில் இருந்த இனிப்புக்கடையில் நுழைந்தார் ராகுல்.

அங்கு சிறிய இனிப்புப்பொட்டலம் ஒன்றை வாங்கி, திமுக நிர்வாகிகளிடம் அளித்தார். அதைக் குறிப்பிடும் வகையிலேயே, தமது பதிவில் தாம் ராகுலுக்கு இனிப்பு வழங்க வேண்டி இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்