வருமான வரித் துறை சோதனை தேர்தல் நேர வன்கொடுமை: செல்வப்பெருந்தகை

வருமான வரித் துறை சோதனை தேர்தல் நேர வன்கொடுமை: செல்வப்பெருந்தகை

2 mins read
8fb0c21b-9efb-4cfa-84b8-68f4d12195a6
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை.  - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: வருமான வரித் துறை சோதனைகள் மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரான ‘தேர்தல் நேர வன்கொடுமை’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாகச் சாடியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அலுவலகத்திலும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையின் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வெளியிட்டார்.

“கடந்த வாரம் ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வந்தபோது, திட்டமிட்டே எங்கள் இடங்களில் அதிகாரிகள் முற்றுகையிட்டனர். எனது அலுவலகத்திற்குள் நுழைந்த அதிகாரிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அணைக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர்.

“சோதனையில் ஏதும் கிடைக்காததால், மீண்டும் கேமராக்களை இயக்கும்படி செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.

“இப்போது எனக்குச் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தவே இல்லை என்று வருமான வரித் துறை பொய் கூறுகிறது,” என்று குற்றம் சாட்டினார்.

“தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வீடுகளில் மட்டும் இதுவரை எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறித்து வருமான வரித் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

“அதிகாரிகளை ஏவி விட்டு மிரட்டுவது ஒருவித அரசியல் தீவிரவாதம். டெல்லி தலைமை தமிழக வேட்பாளர்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியையே இது காட்டுகிறது,” என்றார்.

மேலும், மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் அதற்குத் தயாராக இருப்பதாகவும் செல்வப்பெருந்தகை தனது பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்தியில் புதிய ஆட்சி ஒரு நிமிடத்தில் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்