கரூர்: கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (மார்ச் 6) காலையில் அதிரடிச் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
கரூர் ராயனூரில் வசிக்கும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் கொங்கு மெஸ் மணி, ஆத்தூர்ப் பகுதியில் வசிக்கும் சக்தி மெஸ் சக்திவேல், கரூர் பழனியப்பா நகரில் வசிக்கும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ்.சங்கரின் வீட்டிலும், கிட்டத்தட்ட 20 அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்று அதிரடிச் சோதனையைத் தொடங்கியுள்ளனர். மத்தியப் படையினர் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனைக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
வி.செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 2018 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜியின் மீது வழக்குகளைப் பதிவு செய்தனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், ஓர் ஆண்டுக்கும் மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் அமைச்சரானார். செந்தில் பாலாஜி பிணையை ரத்து செய்யக்கோரி வித்யாகுமார் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.