கோவை: காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகளில் இருந்து, ஏராளமான ஆயுதங்களும் கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாகப் பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கோவையில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்கள் பலர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதாகவும் கஞ்சா விற்பனை, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் காவல்துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள விடுதிகளில் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24)அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காவல் அதிகாரிகள் அதிர்ச்சி அடையும் வகையில், மாணவர்களின் அறைகளில் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அரசு தடை செய்துள்ள குட்கா, புகையிலைப் பொருள்களும் சிக்கின.
இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும் மாணவர்கள், மற்றவர்களுக்கும் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
கோவையில் கல்லூரி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கியுள்ள பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மாவட்டம் முழுதும் 90 குழுவினர் அமைக்கப்பட்டு, 412 காவலர்கள் கஞ்சா விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விநியோகிப்பது யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.