சென்னை: தமிழகத்தில் ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளே ரயில்வே குற்றங்களுக்கு முக்கிய காரணம் என அண்மைய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது என்றும் 39 மதுக்கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்து தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ரயில்கள் மீது கல்வீச்சு, பயணிகளின் உடைமைகள் திருடப்படுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சென்னையில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.