சென்னை: ரயிலை நடைமேடையை ஒட்டி நிறுத்தாமல், தள்ளி நிறுத்தி, முதியவரைக் குதிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்ட இந்திய ரயில்வே துறை, அம்முதியவருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
சென்னை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கே.வி. இரமேஷ். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவஜீவன் அதிவிரைவு ரயில் மூலம் சென்னையிலிருந்து குஜராத்தின் அங்களேஸ்வருக்குச் சென்றார். குளிரூட்டி வசதிகொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் அவர் பயணம் செய்தார்.
அதன்படி அங்களேஸ்வரைச் சென்றடைந்த ரயில், நடைமேடையை ஒட்டி நிறுத்தப்படாமல் சற்றுத் தள்ளி நிறுத்தப்பட்டது. இதனால் திரு இரமேஷும் மேலும் மூவரும் ரயிலிலிருந்து குதித்து இறங்க வேண்டியதாயிற்று. அப்படிக் குதித்தபோது அவர் காயமடைந்தார்.
இதனையடுத்து, சென்னை (வடக்கு) பயனீட்டாளர் குறைதீர்ப்பு ஆணையத்தை அவர் அணுகினார்.
ஆனால், சம்பவம் நிகழ்ந்து பத்து மாதங்களுக்குப் பிறகே, அதாவது 2022 அக்டோபரில்தான் அங்களேஸ்வரில் நடைமேடை நீட்டிப்புப் பணிகள் நிறைவுற்றதாக ரயில்வே துறை விளக்கமளித்தது.
அதனை ஏற்றுக்கொள்ளாத ஆணையம், இழப்பீடாக ரூ.25,000, வழக்குச் செலவிற்காக ரூ.5,000 என 30,000 ரூபாயை ரயில்வே திரு இரமேஷுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.