சென்னை: ஒரே சமயத்தில் 15 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தால் சென்னையில் தண்ணீர் தேங்காமல் வெளியேறும் வகையில் கால்வாய் கட்டமைப்புகள் உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2,000க்கும் மேற்பட்ட சாலைப் பள்ளங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் மழைக்காலம் முடிந்ததும் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சென்னை, நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை எனப் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மழைக்காலப் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையிலுள்ள ராயபுரம் பகுதியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் சனிக்கிழமை (அக்டோபர் 25) ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியா, சென்னையில் 15 சென்டி மீட்டர் வரை மழை பெய்தால், உடனே வடிந்துவிடும் என்றும் அதற்கு மேல் மழை பெய்தால் மோட்டார் பம்ப்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாள்தோறும் தினமும் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. 44 கால்வாய்களில் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு நாட்களில் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால் முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருவதாக மேயர் கூறினார்.
“சென்னை ஒரு திட்டமிடப்படாத நகரம். இங்கு நிறைய கால்வாய்கள் உள்ளன. நீர்நிலைகளைப் பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இச்சூழலில் 15 சென்டி மீட்டர் வரை மழை பெய்தால் உடனே மழைநீர் வெளியேறுவதற்கான சூழல் நிலவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“’மிக்ஜாம்’ புயல்போல் 40 சென்டி மீட்டர் மழை பெய்தால் நீர் வெளியேறுவது சிக்கலாகிவிடும். அப்போது மோட்டார் பம்புகள் வாயிலாக வெளியேற்றப்படும்,” என்றார் மேயர் பிரியா.
சென்னையில் 2022ஆம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குமுன், 10 முதல் 15 நாள்கள் மழைநீர் தேக்கம் இருக்கும் என்றும் தற்போது, இரவில் மழைநீர் தேங்கினாலும் விடிவதற்குள் அகற்றப்பட்டு விடுகிறது என்றும் தெரிவித்தார்.

