தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினிகாந்த்

1 mins read
53d87504-a7ed-4b2d-a41c-6f7d94ec308b
துப்புரவுப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டி தங்கச் சங்கிலியைப் பரிசளித்த நடிகர் ரஜினிகாந்த். - படம்: இந்து தமிழ்

சென்னை: துப்புரவுப் பணியாளர் பத்மாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி பரிசளித்துப் பாராட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகர் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பையில் தங்க நகைகள் இருப்பதைக் கண்ட தூய்மைப் பணியாளர் பத்மா, தமது மேலதிகாரிகளின் உதவியுடன் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த நகைகளை ஒப்படைத்தார்.

காவல் துறையினர் அந்தப் பையைச் சோதனை செய்தபோது ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஏறத்தாழ 45 பவுன் நகைகளைத் தொலைத்துவிட்டதாக ஏற்கெனவே புகார் அளித்திருந்தது தெரியவந்து அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

இதனால், சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளைக் காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பலரும் பாராட்டினர். முக்கியமாக, தமிழக முதல்வர் நேரில் அழைத்து சால்வை அணிவித்து ரூ. 1 லட்சத்தைப் பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் துப்புரவுப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து, தங்கச் சங்கிலியைப் பரிசளித்து அவரது நேர்மையைப் பாராட்டியுள்ளார். ரஜினியின் இச்செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்