சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற விழாவில் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், கலைஞர் நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறையும் 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் ஓராண்டுக்குக் கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயத்தை தமிழக அரசு வெளியிட ஒன்றிய அரசும் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் தலைமைத் தாங்கிய இந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
கலைஞர் பற்றிய சிறப்புக் காணொளி ஒளிபரப்பப்பட்ட பிறகு கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. இதனை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதல்வர் ஸ்டாலின் அதைப் பெற்றுக்கொண்டார். 100 ரூபாய் நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கலைஞரின் கையெழுத்துடன் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
கலைஞரைக் கௌவரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கும் திரு ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.