சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் நச்சு சாராயம் குடித்து 67 பேர் மாண்டனர். அந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) வரவேற்பதாகக் கூறியுள்ளது.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள் முக்கியமானவை. கள்ளக்குறிச்சியில் நச்சு சாராயம் விற்கப்பட்டது பற்றி காவல்துறையினர் அறியாமல் இருந்திருந்தனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ் நாட்டின் காவல்துறை நச்சு சாராய விற்பனையைக் கண்டும் காணாமலும் இருந்து வருவதையே இது காட்டுகிறது என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நச்சு சாராய உயிரிழப்புகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது தவறு என்றெல்லாம் கண்டனக் கணைகளை நீதிபதிகள் தொடுத்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது. இவை அனைத்திற்கும் மேலாக தமிழ் நாட்டிற்குப் பெரும் கேடாக உருவெடுத்துள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்த வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசின் தோல்விக்குக் கிடைத்த சவுக்கடி ஆகும்.
தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருந்தால் தோல்விக்குப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.