விழுப்புரம்: பாமக இளைஞரணித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாசுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. கட்சியினரும் குடும்ப உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “இன்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ஐயாவிடம் கட்சியின் வளர்ச்சிக்காக வருகின்ற சட்டமன்றத் தேர்தல், சித்திரை முழு நிலவு மாநாடு, போராட்டங்கள், விவசாய மாநாடு போன்றவை குறித்து குழுவாக விவாதிக்கப்பட்டது.
“வரும் ஆண்டு கட்சிக்கு முக்கியமான ஆண்டு. மக்கள் விரோத ஆட்சியை அகற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஐயா தலைமையில் விவாதிக்கப்பட்டது,” என்றார்.
“எங்கள் கட்சி ஒரு ஜனநாயகக் கட்சி. காரசார விவாதம் நடைபெறும். உட்கட்சிப் பிரச்சினை குறித்து நீங்கள் பேச வேண்டாம்,” என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்
பட்டனூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாமகவின் 2025 ஆண்டின் புத்தாண்டுச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் பாமகவின் இளைஞரணித் தலைவராக தனது மகள் வழிப் பேரன் ப.முகுந்தனை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்தார்.
“என்னால் உருவாக்கப்பட்ட கட்சி இது. அவர் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார்,” என்று ராமதாஸ் கூற, மேடையிலிருந்து அன்புமணி ராமதாஸ் வெளியேறி சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஜி.கே. மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலக முகுந்தன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த முகுந்தன் தாமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மேலும் ஏற்கெனவே வகித்து வந்த மாநில ஊடகப் பேரவைச் செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொள்வதாகவும் அறியப்படுகிறது.