திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்துவரும் சூழலில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியும் பங்கேற்றார்.
கூட்டம் துவங்கியபோது, பாமக நிர்வாகிகள் அவரை அழைத்து மேடையில் அமர வைத்தனர்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சி நிறுவனர் ராமதாசுக்கு முழுமையாக வழங்கி அவரது தலைமையில் இயங்கும் பாமக பிரிவு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்குவது உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தந்தை -மகன் மோதலால் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில், தனது மூத்த மகரைக் கட்சியில் முன்னிலைப்படுத்தத் தொடங்கி உள்ளார் ராமதாஸ்.
ஏற்கெனவே இவரது மகன் முகுந்தன் பரசுராமனை கடந்த ஆண்டு பாமக இளையரணித் தலைவராக ராமதாஸ் நியமித்ததை அடுத்து அவருக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது பொதுவெளியில் பெரும் மோதலாக மாறியது.