தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராமதாஸ் உடல்நலம்: முதல்வர் அரசியல் கடந்த நேசச் சந்திப்பு!

2 mins read
812de800-5476-431d-af91-52a98218d940
பாமக நிறுவனர் ராமதாசை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பாமக நிறுவனர் ராமதாஸ், 86. இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) இரவு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இதயப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், ராமதாசுக்கு ‘ஆஞ்சியோ’ சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி வந்து இருந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஞாயிற்றுக்கிழமை மாலை ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். திங்கட்கிழமை காலை ராமதாசுக்கு ‘ஆஞ்சியோகிராம்’ செய்யப்பட்டது.

“அந்த ஆஞ்சியோகிராமில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. பயப்படுவதற்கு ஏதுவும் இல்லை. ராமதாசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை,” என்று இருதய மருத்துவ நிபுணர்கள் சொல்லி இருக்கின்றனர்.

“மேலும் இரண்டு நாள்களுக்கு ராமதாஸ் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும். மற்றபடி பயப்படுவதற்கு ஏதுமில்லை என்று மருத்துவர்கள் சொல்லி உள்ளனர்.

“தீவிர சிகிச்சைப் பிரிவில் ராமதாஸ் இருப்பதால் நேரில் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் அவர் அந்தப் பிரிவில் இருப்பார். மருத்துவர்களிடம் நான் பேசி உள்ளேன். 6 மணி நேரத்தில் ராமதாஸ் அங்கிருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்படுவார்,” என்று அவர் கூறினார்.

இதனிடையே, ஜி.கே.மணி, ராமதாசை உடன் இருந்து கவனித்து வருவதாகவும் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும் ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாயின.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் பாமக நிறுவனர் ராமதாசை திரு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

“தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மதிப்பிற்குரிய மருத்துவர் ராமதாஸ் ஐயாவைச் சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்,” என்று இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

குறிப்புச் சொற்கள்