பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க அரசு சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்து

2 mins read
b890588f-7d92-4ecf-b02f-cbd0ce9dbe28
ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழை வளர்க்க, பள்ளி இறுதி வகுப்பு வரை பயிற்றுமொழியாக்கி தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழை வளர்ப்பதற்கோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டுவதற்கோ ‘ரூ’ போடத் தேவையில்லை என்றும் மாறாக அன்னைத் தமிழை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழை எட்டாம் வகுப்பு வரையிலாவது பயிற்றுமொழியாக்கிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 1999ஆம் ஆண்டு சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர்.

“அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்றத் தவறிய அன்றைய திமுக அரசு, அதற்குப் பதிலாக 5ஆம் வகுப்பு வரை மட்டும் தமிழை பயிற்றுமொழியாக்கி அரசாணை பிறப்பித்தது.

“ஆனால், அடுத்த ஐந்து மாதங்களில் அந்த அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு 25 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது,” என்று ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய திமுக அரசு கடந்த 2006ஆம் ஆண்டு முதன் முதலில் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், மொழி விஷயத்தில் உணர்ச்சிகளைத் தூண்டுவது வெறும் அரசியல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதுதான் தீர்வு என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்,” என ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்