ராமேசுவரம்: மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜுன் 14) முடிவடைந்த நிலையில், விசைப்படகு மீனவர்கள் தற்போது கடலுக்குச் சென்று வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஏறத்தாழ 3,500 மீனவர்கள் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.
அந்தப் படகுகள் செவ்வாய்க்கிழமைஅதிகாலை முதல் மீன்பிடித் துறைமுகத்துக்குத் திரும்பத் தொடங்கின.
செவ்வாய்க்கிழமை மட்டும் விசைப்படகு மீனவர்களுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் கிலோ இறால் மீன், கணவாய், நண்டு ஆகிய ஏற்றுமதி மீன்களும் செறையா, பாறை, திருக்கை உள்ளிட்ட இதர மீன்கள் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ வரையிலும் கிடைத்துள்ளன.
இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக முதல் தரத்திலான ஒரு கிலோ இறால் ரூ.500க்கு மேல் விலை போகும். ஆனால் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து முதல் நாளன்று மீனவர்கள் கரை திரும்பியதில் அதிக அளவில் இறால் சிக்கியது.
இதனால், வியாபாரிகள் அவற்றை விலை நிர்ணயம் செய்யாமல் கொள்முதல் செய்தனர்.

