தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்புத் தொழுகை, ஏழைகளுக்கு உணவு: களைகட்டிய நோன்புப் பெருநாள்

2 mins read
3eaa048b-905b-407d-b35c-59100d4f64b9
ரமலான் பண்டிகையையொட்டி, கோவை குனியமுத்தூர் ஆயிஷா மகாலில் சிறப்புத் தொழுகையில் ஈடுப்பட்ட ஜாக் அமைப்பினர். - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: தமிழகத்தில் நோன்புப் பெருநாள் திங்கட்கிழமை (மார்ச் 31) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றதாகவும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் ஏஷியாநெட் ஊடகச் செய்தி தெரிவித்தது.

வழக்கம்போல் இவ்வாண்டும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயிரக்கணக்கானோர் தொழுகையில் பங்கேற்றனர். அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

காலை முதலே இஸ்லாமியர்கள் திரளாகப் பள்ளி வாசல்களுக்குச் சென்று தொழுகை மேற்கொண்ட நிலையில், சமுதாய ஒற்றுமை, அமைதி, நல்லொழுக்கம் குறித்து இமாம்கள் உரை நிகழ்த்தியதைக் காண முடிந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

பல்வேறு பகுதிகளில் சமூக சேவை அமைப்புகள் இணைந்து மாணவர்களும் தன்னார்வலர்களும் ஏழை, ஆதரவற்ற மக்களுக்கு உணவுகளை வழங்கினர். பிரியாணி, இனிப்பு, பழங்கள் போன்ற பல்வேறு உணவுகளும் உணவுப் பொருள்களும் பகிரப்பட்டன.

சிறார்கள், இளையர்கள், மூத்தோர் என அனைவரும் புத்தாடைகள் அணிந்து காணப்பட்டதுடன், வீடுகளில் சிறப்பு உணவுகளும் தயாரிக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஞாயிற்றுக்கிழமை இரவுமுதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. துணிக்கடைகள், இனிப்புக் கடைகள், உணவகங்களில் மக்கள் ஒன்றுகூடி பல்வேறு பொருள்களை வாங்கியும் உண்டும் மகிழ்ந்தனர்.

தமிழகம் முழுவதும் சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ரமலான் கொண்டாடப்படுகிறது. ஒருமாதகால நோன்புக்குப் பிறகு அனைவரும் முழு உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடினர்.

இதேவேளையில், பிற இந்திய மாநிலங்களிலும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் களைகட்டின.

பல்வேறு இடங்களில் உலக அமைதிக்காக சிறப்புத் தொழுகைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி, அதிபர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்