வேலு நாச்சியார், கட்டபொம்மன் பிறந்தநாள்: மோடி, ஸ்டாலின் புகழாரம்

1 mins read
2fe82283-062d-4b95-b278-019ad7e0a471
தமிழ்நாடு போராடும் என்பதை அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தான் வீரமங்கை வேலு நாச்சியாரும் வீரபாண்டிய கட்டபொம்மனும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். - படம்: தினமணி

சென்னை: சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் புகழாரம் சூட்டும் வகையில், தமது சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

‘இந்தியாவின் துணிச்சல்மிக்க வீராங்கனை’ என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் துணிச்சலும் வியூகத்திறமையும் கொண்டிருந்தவர் வேலு நாச்சியார் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த வேலு நாச்சியார் இந்தியாவை ஆளும் உரிமை இந்தியர்களுக்கு மட்டுமே உண்டு என வலியுறுத்தியதாக பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார்.

நல்லாட்சி மற்றும் கலாசாரப் பெருமைக்கான வேலு நாச்சியாரின் உறுதிப்பாடு போற்றத்தக்கது என்றும் அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்றும் தமது பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ்நாடு போராடும் என்பதை அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தான் வீரமங்கை வேலு நாச்சியாரும் வீரபாண்டிய கட்டபொம்மனும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலு நாச்சியார், கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், “மிரட்டினால் அடங்கி விடுவார்கள் என்று எண்ணியவர்களுக்கு தமிழ்நாடு போராடும் என்று அன்றே காட்டிவிட்டோம்.

“இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையை திமுக அரசு தொடர்ந்து போற்றி வருகிறது.

“அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வேலு நாச்சியார் பெயர் சூட்டப்பட்டது. சென்னையில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது,” என்று ஸ்டாலின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்