சென்னை: தமிழகக் கடற்கரையில் அரிய வகை கடல்வாழ் புழு ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
டாக்டர் அஞ்சும் ரிஸ்வி, ஆராய்ச்சியாளர் ரித்திகா தத்தா ஆகிய இருவரும் புதிய வகை கடல்வாழ் நிமட்டோடை (நூற்புழு) கண்டுபிடித்துள்ளதாக இந்திய விலங்கியல் ஆய்வு மையம் கூறியது.
இது அரிதான ‘ஃபெரோனஸ்’ (Pheronous) பேரினத்தில் உலகளவில் பதிவுசெய்யப்பட்ட மூன்றாவது இனமாகும். ‘ஃபெரோனஸ் ஜெயராஜ் பூரி’ (Pheronous jairajpurii) எனப் பெயரிடப்பட்ட இந்த நுண்ணிய புழு, தமிழகக் கடற்கரையில் நடந்த கள ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டதாக அஞ்சும் ரிஸ்வி கூறினார்.
கடல்வாழ் நிமிட்டோட் என்பன கடற்பகுதியின் சுற்றுச்சூழலைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை புழுக்களில் இரண்டு ஆவணப்படுத்தப்பட்ட இனங்கள் மட்டுமே இருந்தன. ஒன்று கடந்த 1966ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது என்றும் மற்றொன்று 2015 இல் சீனாவில் கண்டறியப்பட்டது என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தற்போது தமிழக கடற்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த இனம், இந்தியாவில் நிமட்டோட் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மறைந்த பேராசிரியர் எம்.எஸ்.ஜெயராஜ் பூரிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பெயரை புதிய நிமிட்டோட் பேரின புழுவுக்குச் சூட்டியுள்ளனர்.