பூக்குழியில் இறங்கிய செல்வந்தர் நெருப்பில் தவறி விழுந்து பலி

1 mins read
b81da2a9-76a5-41e4-a33a-36d3bd6f6f62
சொத்துச் சந்தை முகவர் கேசவன். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பூக்குழியில் இறங்கிய சொத்துச் சந்தை முகவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

வாலாந்தரவைத் தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்த கேசவன், 56, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

அப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி ஏப்ரல் 10ஆம் தேதி பூக்குழி இறங்குதல் நடை பெற்றது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சொத்துச் சந்தை முகவரான கேசவனும் வேண்டுதல் நிறைவேற பூக்குழியில் இறங்கினார். அப்போது அவர் நெருப்புடன் கூடிய மரக்கட்டைகள் நிரப்பப்பட்டு இருந்த பூக்குழியில் நிலை தடுமாறி விழுந்தார்.

இதைப்பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தயார் நிலையில் இருந்த மீட்புக் குழுவினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் உடலின் பெரும்பாலான பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி விக்னேஸ்வரி புகார் கொடுத்ததால் ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்