தஞ்சை: தமிழர்களின் கட்டடக்கலை, வரலாற்றுப் பெருமையின் உச்சமாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோவில், உலக அதிசயப் பட்டியலில் இடம்பெறத் தகுதிவாய்ந்தது என நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார்.
இந்திய போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரும் எம்பியுமான சஞ்சய் குமார் ஜா தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு நேரில் வருகைதந்து பார்வையிட்டனர்.
அப்போது, கோவிலின் கோபுர அமைப்பு, கல்வெட்டுகள், பழமையான ஓவியங்கள், நுட்பமான சிற்பக்கலை அம்சங்களை அவர்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு சஞ்சய் குமார் ஜா, தஞ்சாவூர் பெரிய கோவில் இந்தியாவின் ஒரு மிகச்சிறந்த அதிசயம் என்றார்.
தஞ்சை பெரிய கோவில் தாஜ்மகாலைப் போலவே பெரியதாகவும் அதைவிடச் சிறப்பானதாகவும் அமைந்துள்ளது என்றும் அதை உலகப் பாரம்பரியச் சின்னம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கோவில் கட்டடக் கலையின் பிரம்மாண்டத்தை உலகறியச் செய்யும் வகையில், பெரிய கோவிலை உலக அதிசயப் பட்டியலில் சேர்க்க தீவிரமாகப் பரிந்துரைக்கப்படும்,” என்று திரு சஞ்சய் குமார் ஜா தெரிவித்தார்.
முன்னதாக, அக்குழுவினர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கும் சென்று அதன் கட்டடக்கலை, ஆன்மிகச் சிறப்பம்சங்களைப் பார்வையிட்டனர்.
