சென்னை: கிண்டி குதிரைப் பந்தயத் திடல் அமைந்துள்ள நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்குவது பற்றித் தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்யவேண்டும் என்று தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக, நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் அந்தத் திடலை செப்டம்பர் 9ஆம் தேதி, வருவாய்த்துறையினர் மூடி, முத்திரை வைத்தனர்.
சென்னை மாநகரின் மையப் பகுதியில் கிட்டத்தட்ட 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அமைந்துள்ளது கிண்டி குதிரைப் பந்தயத் திடல்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் கிண்டி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அதை மூடினர்.
குதிரைப் பந்தயத் திடல் நிர்வாகம், பல ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கியைச் செலுத்தவில்லை எனப் புகார் எழுந்ததையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்கீழ் வருவாய்த்துறை அவ்வாறு நடவடிக்கை எடுத்தது.
இவ்வேளையில், குதிரைப் பந்தயத் திடல் பகுதியைப் பசுமைப் பூங்காவாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதை, நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழைக் காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் என்று தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் கூறியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

