மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ‘ஹார்டு டிஸ்க்’கள் மீட்பு

மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ‘ஹார்டு டிஸ்க்’கள் மீட்பு

2 mins read
33f1e9ac-de82-431a-8578-b8c14b8d5e50
ஹார்ட் டிஸ்குகளைத் திருடியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். - படம்: தி இந்து

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகக் கணினிகளில் இருந்து களவுபோன 34 ‘ஹார்டு டிஸ்க்’களும் பெங்களூருவில் மீட்கப்பட்டுள்ளன.

அவை எவ்வாறு, யாருக்காகத் திருடப்பட்டன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அண்மையில் அவை திருடப்பட்ட செய்தி எல்லாத் தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

பத்து தளங்களைக் கொண்ட மின்வாரியக் கட்டடத்தின் 4, 5, 7, 10 ஆகிய தளங்களில் உள்ள 18 கணினிகளில் இருந்தே அவை திருடப்பட்டதாகத் தகவல் வெளியானது.

குறிப்பாக, மின்வாரியத்தின் ஊழல் கண்காணிப்புப் பிரிவின் தலைமை அதிகாரியின் மேசையில் இருந்த ஹார்டு டிஸ்க்கும் காணாமல் போனது.

ஒப்பந்தப் பணி, கொள்முதல் விவரங்கள், ஒப்பந்த ஊழியர்கள் நியமனம் ஆகியவை குறித்த தகவல்கள், அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கொள்முதல் விவரங்களும் திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், முறைகேடு மற்றும் ஊழல் சம்பவங்கள் மீது நடத்தப்பட்ட துறைரீதியான புகார்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளும் அவற்றில் இருந்ததாகக் கூறப்பட்டன.

ஹாா்டு டிஸ்குகள் திருடப்பட்டது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனா். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கணினி பராமரிப்புப் பொறியாளராக, ஒரு தனியாா் நிறுவனம் சார்பில் பணியாற்றிய அரக்கோணத்தைச் சேர்ந்த கோபிநாத் (31) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கோபிநாத்தை வியாழக்கிழமை (ஜூன் 4) காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில், அவா், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹாா்டு டிஸ்க்குகளை விற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கோபிநாத்தை அழைத்துக் கொண்டு பெங்களூரு சென்ற தனிப்படை காவல்துறையினர், திருடப்பட்ட 34 ஹார்டு டிஸ்க்குகளை அங்கு மீட்டனர்.

அதேவேளையில், ஹாா்டு டிஸ்க்குகள் திருட்டு தொடர்பாக கோபிநாத்தின் கூட்டாளிகள் சிலரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோபிநாத் யாருக்காக இந்தத் திருட்டில் ஈடுபட்டார், இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பணம் கைமாறியதாகத் தெரிவிக்கப்படும் தகவல் குறித்தும் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்