உயர்கல்வி அமைப்பைச் சீர்திருத்துவது வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி அமைப்பைச் சீர்திருத்துவது வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

2 mins read
fb4597e2-e356-479a-9a4f-b086ea55d535
புதிய விதிமுறைகள் தெளிவான நடைமுறைப் பாதுகாப்புகளைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன் பொதுப்பிரிவினருக்குப் பயனில்லை என்று வட இந்தியாவின் பல மாநிலங்களில் மாணவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். - படம்: இண்டியா டுடே

சென்னை: ‘யுஜிசி’ எனப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்புக்கான விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழித்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் வகையில் சீர்திருத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“எப்போதோ செய்ய வேண்டிய இந்தச் சீர்திருத்தம் 2026 செய்யப்பட்டிருப்பது தாமதமான நடவடிக்கை. இருப்பினும், பாகுபாட்டிலும் நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவது வரவேற்கத்தக்க நகர்வாகும்,” என்று ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“பாஜக ஒன்றிய அளவில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் உயிரை மாய்த்துக்கொள்வது அதிகரித்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடியும்,” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள், காஷ்மீர், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் சம்பவங்களும் தொல்லைக்குள்ளாக்குவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

“இத்தகைய சூழலில், சமத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதது. அதில் இருவேறு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது.

“புதிய யுஜிசி விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

“மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியபோது போராட்டம் நடத்திய அதே பிற்போக்கு மனநிலையுடன்தான் யுஜிசி விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களும் அமைந்துள்ளன. இத்தகைய அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, ஒன்றிய அரசு இந்தப் புதிய விதிகளையோ அல்லது அவற்றின் முக்கிய நோக்கங்களையோ நீர்த்துப் போகச் செய்யக் கூடாது,” என்றார்.

புதிய விதிமுறைகளுக்கு எதிராக வழக்கு

இந்திய யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் மனுவில் புதிய விதிமுறைகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு நியாயமற்றதாகப் பயன்படுத்தும் வாய்ப்பளிக்கக் கூடியது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதன் அடிப்படையில் வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் குழுவால் விசாரிக்கப்படுகிறது. அந்த மனுவை மிருதுஞ்சய் திவாரி, வழக்கறிஞர் வினீத் ஜிடால், ராகுல் திவான் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்