சென்னை: புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் புதன்கிழமை (ஜனவரி 8) அனுப்பியுள்ளது.
அருந்ததி சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 3% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 2024 நவம்பர் 6ஆம் தேதி பேரணி புதிய தமிழகம் கட்சி திட்டமிட்டிருந்தது.
இதற்கு காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், பேரணிக்கு அனுமதி அளிப்பதோ, மறுப்பதோ வேறு விஷயம். ஆனால் அதனை கடைசி நேரத்தில் கூறுவது ஏன், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே கூற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
“காவல்துறை அரசியல் ஏஜென்சி அல்ல” என்ற நீதிமன்றம், மனு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 24க்கு ஒத்திவைத்தது.

