விதிமுறைகள் அமல்: திருப்பூரில் கணக்கில் காட்டப்படாத ரூ.41 லட்சம் சிக்கியது

விதிமுறைகள் அமல்: திருப்பூரில் கணக்கில் காட்டப்படாத ரூ.41 லட்சம் சிக்கியது

2 mins read
f52ddf34-ddd9-4234-bf9a-c0bf6946e1b7
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினரும் கண்காணிப்புக் குழுவினரும் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌.  - படம்: தினத்தந்தி

திருப்பூர்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வந்த சில மணி நேரங்களில் திருப்பூர் மாவட்டத்தில், கணக்கில் காட்டப்படாத 41 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் 72 தேர்தல் பறக்கும் படையினரும் 72 நிலை கண்காணிப்புக் குழுவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, பங்கஜ் என்பவர் வைத்திருந்த கைப்பையில் ரூ.35 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது தெரியவந்தது.

அதற்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை கைப்பற்றி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

பங்கஜ் பெங்களூரிலிருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்ததும் திருப்பூரில் ஆடைகளைக் கொள்முதல் செய்வதற்காக அந்தப் பணத்தைக் கொண்டுவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு அவரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதேபோல் குமரன் சாலையில் வாகனத் தணிக்கையின்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது வாகனத்தில் ஊடகம் என்று எழுதி ஒட்டப்பட்டு இருந்தது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.6 லட்சம் ரொக்கப் பணத்தை அவர் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் திருப்பூர் மாநகரில் ஒரேநேரத்தில் இரு வேறு பகுதிகளில் ரூ. 41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்