சென்னை: தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ரூ.1,156 கோடியில் புதிய தொழிற்சாலை அமைக்க ரிலையன்ஸ் குழுமம் முன்வந்துள்ளதாக தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்நிறுவனம் மூலமாக 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் அமைய உள்ள இத்தொழிற்சாலையில் பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், தமிழகம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
தூத்துக்குடி தொழிற்சாலை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் ராஜா முன்னிலையில் கையெழுத்தானது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம், ஏற்கெனவே எரிசக்தி, இயற்கை எரிவாயு, சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
உலக அளவில் 87வது ஆகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ், தற்போது தமிழ்நாட்டிலும் முதலீடு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.