பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 mins read
9efcde64-af74-4ef7-963e-8147d20454d6
தமிழகத்தின் முன்னாள் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி. - படம்: ஊடகம்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கும் அவருடைய துணைவியார் விசாலாட்சிக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

வருமானத்திற்குமேல் சொத்து சேர்த்த வழக்கில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கும் அவருடைய துணைவியாருக்கும் ஆளுக்கு மூவாண்டுச் சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன், அவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, பொன்முடி தமது அமைச்சர் பதவியை இழந்தார்.

அதன்பின், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கில், செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) பொன்முடி உள்ளிட்டோர் மீதான சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அவர்களுக்குப் பிணையும் வழங்கியது.

மேலும், பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பால் தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அவரது திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர்மீதான தீர்ப்பையும் தண்டனையையும் உச்ச் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், அவர் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாகத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

கடந்த 2006-11ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011 செப்டம்பரில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

குறிப்புச் சொற்கள்