சென்னை: மதுரையில் பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் சூழ்ந்து இருக்கக்கூடிய நிலையில் போர்க்கால அடிப்படையில் பணிகளைத் துரிதப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மதுரையில் முழுவீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறேன். சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம்.
“இன்றும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் சில இடங்கள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
“மதுரையில் உள்ள அமைச்சர் மூர்த்தி, ஆட்சியரிடம் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தேன். மதுரையில் 8 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: ஜிகே வாசன்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு மதுரையில் பெய்திருக்கும் கனமழையால் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடி பணிகளை, அவசியப் பணிகளை மேற்கொண்டு மதுரை மக்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும் தொடர் மழையின் தாக்கத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை.
குறிப்பாக மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுரை மக்களுக்கு மாநகராட்சி பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணம் கொடுத்து அவர்களுக்கு உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்
“மழை வெள்ளத்தால் மதுரை மாநகரம் தத்தளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது,” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் மாநகரத்தின் பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“மதுரை கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படாதது கடும் கண்டனத்திற்குரியது,” எனப் பதிவிட்டுள்ளார்.