சென்னை: வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, ‘பெஞ்சல்’ என்ற பெயருடன் வலுப்பெற்று, நிலப்பகுதிக்குள் சனிக்கிழமை (நவம்பர் 30) நுழைந்தது.
இதன்படி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கிய ‘பெஞ்சல்’ புயல், இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், புதுச்சேரிக்கு அருகே சனிக்கிழமை இரவில் இருந்து ‘பெஞ்சல்’ புயல் நகராமல் அப்படியே நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் அதி கனமழை பாதிப்புக்குள்ளான கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (டிசம்பர் 2) ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் அறிவுறுத்தியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, தருமபுரி மாவட்டத்திற்கு அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு துரித நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.