சென்னை: தமிழ்நாட்டில் எக்காரணம் கொண்டும் மதவாதம் நுழையாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
“காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் மத்திய அரசு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் கூறியிருக்கிறோம். எனவே, எந்த காரணத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது” என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 28) தமிழக சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியபோது, தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார்.
அதற்கு அவை முன்னவர் துரைமுருகன், மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பதிலளித்து பேசினர்.
இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
“பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ஆடிட்டர் ரமேஷ் கொலை குறித்து பேசியிருந்தார்.அந்தக் கொலை அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காஷ்மீர் மாதிரி தமிழ்நாட்டில் நிச்சயமாக நடைபெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் சம்பவம் குறித்து பேசும்போது, மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து இதுவரை நாங்கள் பேசவில்லை,” என்றார் ஸ்டாலின்.

