சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தொகுதிப் பங்கீடு, பிரதமரின் தமிழக வருகை குறித்து இருவரும் விரிவான ஆலோசனை நடத்தியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக கூட்டணி இறுதியானதைத் தொடர்ந்து, புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் புதன்கிழமை இரவு நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தருவதற்குள் கூட்டணியை இறுதி செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, புதுடெல்லிக்கு வியாழக்கிழமை (ஜனவரி 8) பயணம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார்.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) காலை நேரில் சென்ற நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பாஜக தரப்பில் 56 தொகுதிகளும், அமைச்சரவையில் பங்கீடும் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 30 தொகுதிகள் வரை ஒதுக்க இபிஎஸ் ஒப்புக் கொண்டதாகவும், அதிமுக 170 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது விரைவில் அறிவிக்கப்படும். பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டது,” எனத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அமைச்சரவையில் பங்கு கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்கவில்லை.
முன்னதாக, பாமகவுக்கு 17 முதல் 20 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்க அதிமுக ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

