தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வர்த்தகர்கள் மாநாட்டில் 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

2 mins read
6cd6b7c4-3cad-4071-9ad3-a6a9347d8c24
கோவையில் நடைபெற்ற இம்மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். - படம்: ஊடகம்

கோவை: புதிதாகத் தொடங்கப்படும் தொழில்களுக்கான மாநாடு கோவையில் தொடங்கியது. இதில் நாற்பது நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வியாழக்கிழமை (அக்டோபர் 9) தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

அப்போது, எதிர்வரும் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளியல் கொண்ட மாநிலமாக மாற்றும் முனைப்புடன் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“தொழில்கள் வளர்ச்சி அடைகிறது என்றால் அது சார்ந்த நிறுவனங்கள் மூலம் ஒரு மாநிலம் வளர்ச்சி அடையும். வளர்ச்சியின் அடையாளமாக தொழில்நிறுவனங்கள் உள்ளன.

“சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தைத் தேடித்தான் தொழில்துறையினர் வருவார்கள். தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நிறுவனம் நடத்தலாம் என்பதை எடுத்துக்கூறவே இதுபோன்ற மாநாடுகள் நடைபெறுகின்றன,” என்று நிகழ்ச்சியில் பேசும்போது திரு ஸ்டாலின் தெரிவித்தார்.

எண்ணற்ற தொழில் முதலீடுகளையும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும் அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் தமிழகம் ஈர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்துறை சார்ந்த புதிய சிந்தனைகளும் முயற்சிகளும் அவசியம் என்றார்.

புதிதாகத் தொடங்கப்படும் தொழில்கள் குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த 4 ஆண்டுகளில் புதிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, மத்திய அரசின் தளத்தில் ஆறு மடங்கு அதிகமாகப் பதிவாகி உள்ளது என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

இதில் சரிபாதி நிறுவனங்களைப் பெண்கள் தலைமையேற்று நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடமாக தமிழகத்தை மாற்றுவோம் என்றார்.

மேலும், இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டு நிறுவனங்களில் தமிழக அரசு முதலீடு செய்யும் வகையில் இணை உருவாக்க நிதியம் தொடங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்