தமிழகத்திற்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை

2 mins read
9487865a-d318-406f-9aad-f20c9e532aae
முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு ‘சமக்ர சிக்‌ஷா’ என்ற திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கி வருகிறது. இதில் தமிழகத்துக்கு ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக நிதி கிடைக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ஐ முழுமையாக அமல்படுத்தி மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ் நாட்டுக்கு மேற்குறிப்பிட்ட திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு தமிழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் கல்வி, சமூகச்சூழலில் இரு மொழிக்கொள்கை என்பது நீண்டகாலமாக வேரூன்றி உள்ளது என்றும் அதைப் பின்பற்றுவதில் தமிழகம் எப்போதும் உறுதியாக உள்ளது என்றும் திரு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால்தான் தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இரு மொழிக் கொள்கையில் கொண்டு வரப்படும் எந்த ஒரு மாற்றமும் தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்று கூறியுள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள சில விதிகள் குறித்து தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே கடிதம் மூலம் தனது கவலையை முறையாக தெரிவித்துவிட்டது என்றும் அதன் பிறகு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் தமிழக அரசுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

“தற்போது ஒரு மாநிலத்தில் அங்குள்ள காலச்சூழலுக்கு ஏற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக அந்த மாநிலத்தை கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் மத்திய அரசின் அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி கூட்டாட்சி தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயல்.

“இது குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கையை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளைப் பெரிதும் பாதிக்கும்.

“லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி, பிரதமர் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும்,” என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்