கோவை: கோவை போன்ற முதன்மை நகரங்களில் கொலை, போக்சோ போன்ற கொடூரக் குற்றச்சம்பவங்களில் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
கோவை சிறார் நீதிக்குழுமத்தின் செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி, ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனை விதிக்கப்படக்கூடிய கொடுங்குற்ற வழக்குகளில் 98 விழுக்காட்டினருக்கும் அதிகமானவற்றில் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களே சம்பந்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது விசாரணையில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய சிறார்களில் ஏறக்குறைய 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தீவிர போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் குற்றங்களைச் செய்யாமல், பெரியவர்களுடன் இணைந்து திட்டமிட்டே இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இணையம், சமூக ஊடகங்கள் மூலம் சட்டத்தின் விளைவுகளையும் தண்டனைகளையும் தெளிவாக அறிந்திருந்தும், சிறார் என்ற பாதுகாப்புக் கேடயத்தால் குறைந்த தண்டனையுடன் தப்பித்துவிடலாம் என்ற தவறான எண்ணமே இதற்கு முக்கியக் காரணமாக அமைவதாகச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய குற்றவாளிகள் வழக்கு விசாரணையின்போதே 18 வயதைக் கடந்து, பின்னாள்களில் தீவிர குற்றவாளிகளாக மாறும் ஆபத்து நிலவுகிறது.
இன்றைய சூழலில் சிறார்களின் மன, உடல் முதிர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சிறார் நீதிச் சட்டத்தின்கீழ் ‘சிறார்’ என்பதற்கான வயது வரம்பை 18ல் இருந்து குறைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
