கன்னியாகுமரி: இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா இணைந்துள்ளதால் மத்தியக் கிழக்கு வட்டாரங்களில் போர்ப் பதற்றம் சூழ்ந்துள்ளது.
இதனால், அந்நாடுகளில் சிக்கியுள்ள 1,000 தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருக்கும் குமரி மீனவர்கள் பதற்றத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டது.
‘ஆப்பரேஷன் சிந்து’ மூலம் ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை மத்திய அரசு மீட்டுவரும் நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அவர்களைப் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்துவரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்பதற்கு உடனடியாக அரசதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இந்திய வெளியுறவு அமைச்சை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 22) அவர் கடிதம் எழுதினார்.