திருச்சி: தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புப் பூங்காவை முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அமைக்கவுள்ளனர்.
அங்கு பயிலும் பொறியியல் மாணவர்களைத் தொழில்முனைவோராக ஆக்கும் நோக்கில் இந்தப் பூங்காவை ரூ.150 கோடி செலவில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் உருவாக்கவுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பப் பூங்காவில் விவசாயத் தொழில்நுட்பம், ஃபின்டெக், இணையத் தொழில்நுட்பம், பசுமைத் தொழில்நுட்பம், குவாண்டம் கம்பியூட்டிங், குறைகடத்தி உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தில், தொழில்நுட்பப் பூங்கா கட்டடத்திற்கு ரூ.100 கோடியும் உபகரணங்களுக்கு ரூ.50 கோடியும் முதலீடு செய்வதற்கு அந்த சங்கம் முன்மொழிந்துள்ளது.
இது குறித்து திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி.அகிலா, முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் கே.மகாலிங்கம் ஆகியோா் சென்னையில் திங்கட்கிழமை செய்தியாளா்களிடம் பேசினர்.
என்ஐடி முன்னாள் மாணவா் சங்கத்தின் உலகளாவிய சந்திப்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முன்னாள் மாணவா்கள் 1,500 போ் பங்கேற்கின்றனா் என்று கூறினர்.
மேலும், மாநிலத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், டாடா குழுமத்தின் தலைவா் என்.சந்திரசேகரன், கூகல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் தலைமை வணிக உளவியலாளர் கோபி கள்ளில் ஆகியோர் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்கின்றனர்.
முன்னாள் மாணவா்கள் சாா்பில் திருச்சி என்ஐடி-யில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றும் அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்காக சேரவிருக்கும் என்ஐடி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டம், வெளிநாட்டு நிறுவனங்களில் இன்டா்ன்ஷிப் பெற உதவும் திட்டம் முன்னாள் மாணவா்களால் செயல்படுத்தப்படவுள்ளன என்று அந்தச் செய்தியாளர் கூட்டத்தில் மாணவர் சங்கத்தலைவர் கே.மகாலிங்கம் தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய என்ஐடி இயக்குநர் ஜி.அகிலா, இங்கு ஆராய்ச்சிப் பூங்கா உருவாவதால், முன்னாள் மாணவர்களின் வழிநடத்தலில் ஆராய்ச்சி மற்றும் புதிதாகத் தொழில்தொடங்குவோருக்கு நல்ல ஊக்குவிப்பாக அமையும்.
மேலும், தொழில்துறைத் திட்டங்களில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் அங்குள்ள அலுவலக இடங்களையும் சோதனைக் கூடங்களையும் பயன்படுத்திக்கொள்ள இந்தத் திட்டம் நல்ல வாய்ப்பளிக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.