நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம்

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம்

2 mins read
2386cf33-b65f-4043-a2e3-c6832f62b26c
மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்முறைக் கல்வி மட்டுமன்று என்றும் அது மனித உயிர்களைக் காப்பாற்றும் உன்னதப் பணிக்கான கல்வி என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார். - படம்: மாலை மலர்
Google News Preferred Icon

சென்னை: மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் அரசு கொண்டுவந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.

பாஜகவைச் சேர்ந்த ஒரே ஓர் எம்எல்ஏ மட்டும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்முறை கல்வி மட்டுமன்று என்றும் அது மனித உயிர்களைக் காப்பாற்றும் உன்னதப் பணிக்கான கல்வி என்றும் குறிப்பிட்டார்.

“அந்தக் கல்விக்கான வாய்ப்பு வசதி உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒவ்வொருவர்க்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு,” என்றார் திரு அருண்ராஜ்.

இந்தியாவில் சிறந்த பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பலனடைவதாகவும் சொன்னார்.

பல குடும்பங்கள் நீட் பயிற்சிக்காக பெருந்தொகையைச் செலவிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட திரு அருண்ராஜ், பொருளியல் பலமுள்ள மாணவர்களுக்கு இது கூடுதல் வாய்ப்பை வழங்குவதாகச் சுட்டிக்காட்டினார்.

“நீட் தேர்வு முறையானது சமூக, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்குப் பதிலாக அவற்றை மேலும் அதிகரித்துள்ளது.

“தவெக அரசு எந்த மாணவரின் கனவையும் பறிக்க விரும்பவில்லை. மாறாக, திறமையுள்ள ஒவ்வொரு மாணவரின் கனவும் அவர்களின் குடும்பப் பொருளியல் பின்னணி காரணமாக தடைபடக்கூடாது எனப் போராடுகிறது.

“மாணவர்களின் பன்னிரண்டு ஆண்டுகாலக் கல்வியைப் புறந்தள்ளி, ஒருநாள் நுழைவுத்தேர்வு மாணவர்களின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுக் கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வருவதுதான்,” என்றார் அமைச்சர் அருண்ராஜ்.

இதையடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது.

குறிப்புச் சொற்கள்
நீட் தேர்வுசட்டமன்றம்மருத்துவம்கல்விபயிற்சிமாணவர்கள்தீர்மானம்