சென்னை: தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற கோவில்களுக்கு வருகைதரும் முக்கியமான பிரமுகர்கள் கோவிலுக்குள் புகைப்படங்கள், காணொளிகள் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திரையுலகினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்த சமய அறநிலையத்துறை ஆணையர் வினய், துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், திரைத்துறை முதலான கலைத்துறைப் பிரபலங்கள், முக்கியமானவர்கள் திருக்கோவிலுக்குத் தரிசனம் செய்யவருவதாகத் தெரியவந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாக அல்லது தெரிய வந்தவுடன் அவர்கள் வரவிருக்கும் திருக்கோவில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் ஆணையர் அலுவலகத்தில் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்தகைய வருகையின்போது, திருக்கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கும் காணொளிப்பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார்.
திருக்கோவிலின் புனிதத்தன்மையும் மரபுசார்ந்த ஒழுங்கும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் தமது சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள், பணியாளர்கள் மட்டுமே முக்கியப் பிரமுகர்களுடன் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என ஆணையர் வினய் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அரசியல் பிரமுகர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.களுக்கும் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென தினமலர் உள்ளிட்ட தமிழக ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன.


