சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறைகள் - உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்களை அறிவித்தார்.
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்காகப் புதிய ஓய்வறைகள் கட்டப்படும். ஒவ்வோர் ஓய்வறையும் 300 சதுர அடி அளவில் அமைக்கப்படும். இதில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இடம்பெறும்.
“பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 31,373 தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாகச் சத்தான உணவு வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.
“சனிக்கிழமை (நவம்பர் 16) முதல், தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களிலேயே நேரடியாக உணவு விநியோகம் செய்யப்படும். இத்திட்டம் டிசம்பர் 6ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
“சென்னையைத் தவிர்த்து, மீதமுள்ள 24 மாநகராட்சிகள், 145 நகராட்சிகளில் பணியாற்றும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் 3 வேளையும் சத்தான உணவைப் பெறுவார்கள்.
“காலை/மாலை நேரத்தில் இட்லி, வடை, சாம்பார் / பொங்கல், சாம்பார் / கிச்சடி, சாம்பாரும் மதிய வேலையில் கலவை சாதமும் காய்கறி வகைகளும் வழங்கப்படும்.
“வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்கள் சென்னையை ‘கிளீன் சிட்டி’ என்றும், தமிழ்நாட்டை ‘கிளீன் ஸ்டேட்’ என்றும் சொல்ல வேண்டும். இதற்குத் தூய்மைப் பணியாளர்கள் துணை நிற்க வேண்டும்
“தூய்மைப் பணியாளர் என்பது மற்ற எந்தப் பணியையும் போன்ற பணியாகக் கருதப்படுகின்ற அளவுக்கு, இவர்களுடைய கண்ணியமும், முறையான பணிச்சூழலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும், உடல்நலம் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பொறுப்புகளில் உட்கார வேண்டும் என்பதே தனது கனவு,” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

