திருச்சி: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்குச் சொந்தமான பங்களாவின் பட்டாவில் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நில அளவையாளர் (சர்வேயர்) சார்லஸ் அந்த மனுவை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையில், மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்குச் சொந்தமான பங்களா மற்றும் காலியிடம் 80,000 சதுரடி பரப்பளவில் உள்ளது. அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.25 கோடி.
“எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர், அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி மகன் மற்றும் மகள்கள் 10 பேர் வாரிசுகளாக பதிவு செய்து, அந்த பங்களாவை தங்களது பெயருக்கு மாற்றி பட்டா பதிவு செய்தனர்.
“ஆனால், எம்ஜிஆர் வாரிசுகளின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு, ‘மதுரம் கணவர் கோவிந்தசாமி’ என கணினி நிலப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.
“எம்ஜிஆரின் வாரிசுகளின் பெயர்களை பட்டாவில் இருந்து நீக்க வேண்டும் என்றால், கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்து அவரின் ஆணை பெற்று பெயர்களை நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
“இந்நிலையில், தற்போது நிலப்பதிவேட்டில் எம்ஜிஆரின் வாரிசு பெயர்கள் பதியப்படாமல் உள்ளதுடன், ‘மதுரம் கணவர் கோவிந்தசாமி’ என்ற பெயரும் நீக்கம் செய்யப்பட்டு, ‘பொதுச்செயலாளர் அதிமுக’ என கணினியில் பதியப்பட்டுள்ளது.
“எனவே, எம்ஜிஆர் தனது சொத்தை அதிமுகவுக்கு பத்திரம் மூலம் வழங்கியிருந்தாரா அல்லது உயில் ஏதேனும் எழுதி வைத்தாரா என்பதை விளக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த விவகாரத்தில் கோட்டாட்சியரின் அலுவலக கோப்பைப் பெற்று, கோட்டாட்சியர் செய்த விசாரணை மற்றும் உத்தரவை பரிசீலனை செய்து, வறுமையில் வாடும் எம்ஜிஆரின் வாரிசுகள் பெயர்களை மீண்டும் நிலப்பதிவேட்டில் பதிய ஆட்சியர் உத்தரவிட வேண்டும்,” என்று சார்லஸ் தமது மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து சார்லஸ், `இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறுகையில், “எம்.ஜி.சக்கரபாணியின் மகன் சந்திரன் என்பவர் எம்ஜிஆர் பங்களா பட்டா பெயரை மாற்ற தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தார். கொரோனா தொற்றுக்குப் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார். மற்ற எம்ஜிஆர் வாரிசுகள், எங்கள் சித்தப்பா இடம் எங்களுக்கு கிடைக்கும்போது கிடைக்கட்டும் என்று உள்ளனர்,” எனத் தெரிவித்தார்.

