சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவது அதிகரித்து வரும் நிலையில், லஞ்சம் பெறுவோரில் கையும் களவுமாகப் பிடிபட்டவர்கள்தான் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகப் பொதுமக்கள் புலம்புகிறார்கள். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் வருவாய்த்துறையில்தான் அதிகமான ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
அத்துறையில் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக லஞ்சப் பணம் பெறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதன் தொடர்பில் பதிவான வழக்குகளில், அதிகபட்சமாக கடந்த 2023-24ஆம் ஆண்டு மட்டும் 155 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றுள் 70 வழக்குகள், கிட்டத்தட்ட பாதி வழக்குகள் வருவாய்த்துறையுடன் தொடர்புடையவை.
மின்வாரியத்தில் லஞ்சம் தொடர்பாக 26 வழக்குகள் பதிவான நிலையில், ஊரக வளர்ச்சித்துறை 22, உள்ளாட்சி அமைப்புகள் 21, சர்வே - 18, காவல்துறை 10, பத்திரப்பதிவுத்துறை 8, சமூகநலத்துறை - 4, வணிகவரித்துறை, கூட்டுறவு, வேளாண், கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை 2, தொழிலாளர் நலத்துறை 3 வழக்குகள் எனப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் கையும் களவுமாகப் பிடிபட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் லஞ்சம், ஊழல் பற்றி பேசுகையில் “ஊழல்தான் தற்போது நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. சாதாரண மக்கள் காவல் நிலையம், தாலுகா அலுவலகம் செல்லவே பயப்படுகின்றனர். அனைத்துப் பணிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மக்களை நிர்பந்திக்கின்றனர்.
“அரசு அலுவலகங்களில் ஊழல் இல்லை’ என, தமிழக அரசு, நீதிமன்றத்துக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா? லஞ்சம் வாங்குவோரை தவறாக பார்த்த காலம் மாறி, லஞ்சம் வாங்காதவர்களை, இப்போது தவறாக பார்க்கும் காலமாகி விட்டது.
தொடர்புடைய செய்திகள்
“சான்றிதழ்கள் பெற, இணைய வசதிகள் உள்ளன. ஆனாலும், அந்த விண்ணப்பத்தை நிராகரித்து, லஞ்சம் வாங்குவதற்காக, மக்களை அதிகாரிகள் நேரில் வரச் செய்கின்றனர்.
ஊழலை ஒழியுங்கள்
இணையம் வாயிலாக வசதிகளைப் பெற முடியாத மக்கள், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தே சான்றிதழ்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இரும்பை முதல் முறையாக பயன்படுத்தியது தமிழகம். இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து, உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்,” என்று உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கூறினர்.