சென்னை: வருவாய் ஈட்டுவதில் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய ரயில் நிலையங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் இந்திய ரயில்வே வாரியமானது, அண்மையில் வெளியிட்ட பட்டியலில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில், வருமான அடிப்படையில் சாதித்த ரயில் நிலையங்களில், முதல் இடத்தை புதுடெல்லி ரயில் நிலையம் பிடித்துள்ளது.
மொத்தம் 3.93 கோடி பயணிகளைக் கையாண்டுள்ள அந்த ரயில் நிலையம், ரூ.3,337 கோடி வருவாயை ஈட்டியதாக ரயில்வே வாரிய அறிக்கை தெரிவிக்கிறது.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஹௌரா ரயில் நிலையம் 6.13 கோடி பயணிகளைக் கையாண்டு, ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் நிலையமும் 3.05 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளது.
இதன் மூலம் ரூ.1,299 கோடி வருமானம் ஈட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ரயில்வே வாரியம், புறநகர் ரயில் நிலையங்களுக்கான பட்டியலில் மும்பை ரயில் நிலையங்கள் முதல் இடத்திலும், சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

