சென்னை: தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்துக்கு கனிமவளங்களை எடுத்துச்செல்ல தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த உரிமங்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணி பற்றி விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“கருங்கல் சல்லிகள், எம் சாண்ட் ஆகிய கனிமங்களை தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்ல நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 15 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கேரளத்தில் தரமான பாறைகள் கிடைக்கும் நிலையில் அவற்றை வெட்டி எடுக்க அனுமதிக்காமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தமிழக கனிம வளங்களை சூறையாட அரசே அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமவளங்கள் தமிழ்நாட்டின் தேவைகளுக்கே போதவில்லை என்பது தான் உண்மை. இதனால் சல்லி, எம் சாண்ட் போன்றவற்றின் விலைகள் இரு மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்திருக்கின்றன.
“மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும் பகுதி கேரளத்தில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் கிடைப்பதை விட கடினமான, தரமான பாறைகள் கேரளத்தில்தான் உள்ளன. அவற்றை கேரள அரசு பாதுகாக்கிறது. ஆனால், தமிழக அரசோ இயற்கை வளங்களை அழிக்கிறது. அதிலும் ஒரே வட்டத்தில் 15 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் அங்குள்ள பாறைகள் என்னவாகும் என்பது குறித்த கவலையோ, அக்கறையோ தமிழ்நாடு அரசுக்கு கொஞ்சமும் இல்லை.
“கேரளத்துக்கு கனிம வளம் அதிக அளவில் கொண்டு செல்லும் நிறுவனங்களும், குவாரிகளும் தமிழக சட்டமன்றத் தலைவர் அப்பாவு-வின் தொகுதியில்தான் உள்ளன. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், மண்ணையும், மக்களையும் காப்பதில் அவருக்கு அதிக அக்கறை இருக்கும். இத்தகைய தவறான செயல்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்துவது தான் அவரது முதன்மைக் கடமையாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அன்புமணி கூறியுள்ளார்.

